எம்.ஜி.ஆரின் வாரிசுதான் நான்: காரணம் சொன்ன கமல்ஹாசன்

எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான் என மீண்டும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிப்பிலிருந்து அரசியலுக்கு வரும் பலரும் தங்களை எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்றே அழைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு எனக் கூறி அரசியலில் நுழைந்த நடிகர் பாக்யராஜ் அரசியலில் இருந்து ஒதுங்கினார். விஜயகாந்தை அவரது கட்சியினர் கறுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழைத்தனர். தற்போது கமல்ஹாசனும், ரஜினியும் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசிவருகிறார்கள்.

ஆனால், மக்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அத்துடன் எம்.ஜி.ஆரின் நீட்சி எனச் சொல்லும் கமலும், ரஜினியும் அதிமுகவில் இணையலாம் என அதிமுக நாளேடு விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சென்னை அருகே போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது உரையாற்றிய கமல்ஹாசன், “தேர்தல் வந்ததால் எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் இத்தனை நாட்களாக அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களது முதல் கோஷமே ‘நாளை நமதே’. எம்.ஜி.ஆர் மக்கள் திலகம். அதனால் யார் வேண்டுமானாலும் அவரின் வாரிசு என்று சொல்வார்கள். நல்லதை நினைக்கும் எல்லோரும் எம்.ஜி.ஆர் வாரிசு தான். அதனால் நானும் எம்.ஜி.ஆரின் வாரிசுதான். மீண்டும் சொல்கிறேன் எம்.ஜி.ஆரின் நீட்சி நான்” என அதிமுகவினருக்கு விளக்கம் சொன்னார்.

உப்பை சுவாசித்தவரிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்றவர், எங்களின் சட்ட மன்றத்தில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் எனவும் கூறினார்.