முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை அரசு மாற்ற வேண்டும் – சந்திரிகா வலியுறுத்து

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற தனது முடிவை அரசாங்கம் மாற்றவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூலில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்த உடல்கள் தொடர்பான விடயம் குறித்து அனைத்து விபரங்களும் தனக்கு கிடைக்கும்வரை தான் அறிக்கை எதனையும் விடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதேவேளை உடல்களை தகனம் செய்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடனும் விஞ்ஞானிகளுடனும் ஆராய்ந்த பின்னர் உடல்களை தகனம் செய்வதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதை முஸ்லீம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி முஸ்லீம் சமூகம் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றி உடல்களை அடக்கம் செய்வதற்கான நியாயபூர்வமான உரிமையுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.