ரஷ்ய சுற்றுலா பயணிகள் குழு 26 ஆம் திகதி இலங்கை வரும்

எதிர்வரும் 26 ஆம் திகதி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக இலங்கைக்கு வருகைதர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி 200இற்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு 26 ஆம் திகதி கட்டுநாயக்கா மற்றும் மத்தளசர்வதேச விமான நிலையங்களுக்கு வருகை தரவுள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமானநிலைய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், பயண முகவர்களுக்கும் சேவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்தில் கிருமி நீக்கம், சுங்க மற்றும் குடிவரவு நடவடிக்கைகள், அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் மற்றும் சுற்றுப்பயணத்துக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாடு திரும்ப முடியும். அதன்படி ஒரு நாளைக்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு அதிகபட்சம் 3,500 ஆக இருக்கலாம்” என்றார்.