ஜெனீவா ஐ.நா. கூட்டத் தொடரை ஒன்றுபட்டுக் கையாளத் திட்டம் – ஏனைய கட்சிகளுடன் பேச கூட்டமைப்பு முடிவு

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து ஒன்றுபட்டு கையாள முயற்சிப்பது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது.

இதற்காக அக்கட்சிகளுடன் தொடர்ந்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், கருணாகரம் (ஜனா), சாணக்கியன், கலையரசன், சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகிய எம்.பிக்களும், மாவை சேனாதிராசா, ரெலோவின் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோரும் பங்குபற்றினர்.

புலம் பெயர் தமிழ் அமைப்புகளினால் தயாரிக்கப்பட்ட ஒரு நகல் வடிவமே வரைவுத் திட்டமாக சுமந்திரனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அந்த நகல் வரைவை நிராகரித்துள்ள நிலையில், ஜெனிவா விவகாரத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அணுகும் வகையில் அக் கட்சிகளுடன் தொடர்ந்து பேசுவது என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.