சினிமா 2020; இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்

புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம்.

தர்பார்

இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் பெரிய ஓபனிங் இருந்தது. மும்பை போலீஸ் கமிஷனராக கெத்து காட்டியிருப்பார் ரஜினி. அனிருத் இசையில் பாடல்களை சபரி மலை பாடலோடு கலாய் காமெடிகள் நடந்தாலும், ட்ராக்காக நல்ல பாடல்களே! ஆனால் பழைய அலெக்ஸ் பாண்டியனையோ, கோபிநாத்தையோ, இன்ஸ்பெக்டர் சுபாஷையோ இந்த ஆதித்யா அருணாச்சலம் முந்தவில்லை. ஆனாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிகர்களை தக்கவைத்திருப்பார் ரஜினி என்பதற்கு இந்தப் படம் ஒரு சாம்பிள்.

பட்டாஸ்

ரஜினியைப் போலவே தனுஷூக்கும் பெரிய ஓபனிங் பட்டாஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். கடந்த வருடம் அசுரன் படம் கொடுத்த வெற்றியினால், கூடுதல் எதிர்பார்ப்புடன் வெளியாகி பட்டாஸ் நமத்து போனது தான் மிச்சம். இருப்பினும் கமர்ஷியலாக பார்க்கக் கூடிய படமாக இருந்தது. படத்தில் தமிழின் பாரம்பரிய தற்காப்பு கலையான அடிமுறையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும். அடிமுறை பற்றி பேசியதே படத்தின் ஹைலைட்.

சைக்கோ

கமர்ஷியல் ஜானர்களில் பயணித்துக் கொண்டிருந்த உதயநிதி ஒரு படிமேல் சென்று, பரிசோதனை முயற்சியாக த்ரில்லர் ஜானரில் நடித்த படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் நடிப்பில் வெளியான சைக்கோ, தரமான சம்பவம். பார்வைச் சவால்கொண்ட உதயநிதி காதலியைத் தேடும் கதை. அதற்குள் அன்பை விதைத்திருக்கிறார் மிஷ்கின். லாஜிக்கை யோசிக்காமல் பார்த்தால், இருக்கை நுனிக்கு கொண்டு செல்லும் என்பதே சைக்கோவை ரசிகர்கள் விரும்ப காரணமாக அமைந்தது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ரசிகர்கள் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, கவுதம் வாசுதேவ் மேனன், ரக்‌ஷன் நடிப்பில் மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் படம் வெளியானது. துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு தகிடுதத்தோம் செய்து சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான். இப்போ சொன்ன கதை வழக்கமான சினிமா பாணி. படத்தின் இரண்டாம் பாதி யோசிக்காத இன்னொரு திரைக்கதையாக விரியும். படம் இப்படித்தான் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கிக் கொண்டே போவது தான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

ஓ மை கடவுளே

காதலர் தின ஸ்பெஷலாக ரியல் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவானது “ஓ மை கடவுளே”. அசோக் செல்வன், ரித்திகா, வாணி போஜன் நடித்திருந்தனர். படத்தின் பெரிய பலம் விஜய்சேதுபதி. கெஸ்ட் ரோல் என்றாலும் படம் முழுக்க விஜய்சேதுபதியின் டிராவல் இருக்கும். தோழி ரித்திகாவை திருமணம் செய்துகொள்ளும் அசோக் செல்வனுக்குத் திருமண வாழ்க்கையில் ஈர்ப்பு இருக்காது. வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் ? அப்படி, இரண்டாவது வாய்ப்பு என ஒன்று இல்லவே இல்லை. கிடைத்திருக்கும் வாழ்க்கையே அற்புதமானது தான் என ரொமாண்டிக்காகச் சொல்லியிருக்கும் படம். நட்பு, காதல், கல்யாணம் , காமெடி என ஒரு பக்கா பேக்கேஜ்.

தாராள பிரபு

பாலிவுட்டில் ஹிட் அடித்த விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த படம் தாராள பிரபு. கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார். வேலை தேடும் ஹரிஷ் கல்யாணுக்கு காதல் செட் ஆகும் நேரத்தில், குழந்தை இல்லாதவர்களுக்கு உயிரணு தானம் பெற்று குழந்தை பாக்கியம் தரும் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் விவேக் ஹரிஷின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதற்குப்பின் நடக்கின்ற கலாட்டாக்கள் மற்றும் திருப்பங்கள் படத்தை ரசிக்கவைக்கிறது. கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக கடைசி ஹிட் தாராள பிரபு.

க/பெ ரணசிங்கம்

இந்த வருடம் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், விஜய்சேதுபதி வந்துபோன படங்களெல்லாம் ஹிட்டாகியிருக்கிறது. ஓ மை கடவுளே தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான கணவர் பெயர் ரணசிங்கம் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்தப் படம் தண்ணீர் பிரச்னையில் துவங்கி உலக அரசியலைப் பேசியது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் விஜய்சேதுபதி இறந்துவிடுகிறார். அவரின் உடலை கேட்டு தமிழ்நாட்டில் போராடும் ஒரு பெண்ணின் கதை. உணர்வுப்பூர்வமாக எத்தனையோ அரசியலை பேசி சென்றது.

அந்தகாரம்

நெட்ஃப்ளிக்ஸின் ஒரிஜினல் திரைப்படமாக வெளியானது அந்தகாரம். ஆத்மாவை விரட்டப் போய் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி, சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கும் கோச், நோயாளி சுட்டதால் குரலை இழந்து தவிக்கும் நபர் என மூன்று கேரக்டர்களின் கதை ‘அந்தகாரம்’. தமிழின் சமீபத்திய சென்சேஷனாக இருப்பவர் அர்ஜுன் தாஸ். கைதியில் மிரட்டியவர், இதில் கொஞ்சம் கூடுதலாக அசத்தியிருப்பார். டீசெண்டான ஒரு படம்.

மூக்குத்தி அம்மன்

நயன்தாரா அம்மனாக நடிக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். இதுவும் ஓடிடி ரிலீஸ் தான். அம்மனுக்கு ஒரு பிரச்னை, மனிதனாக பாலாஜியோடு சேர்ந்து அந்த சதித்திட்டத்தை முறியடிப்பதே ஒன்லைன். அதற்குள் இருக்கும் காமெடி தான் திரைக்கதை. யார் கடவுள், போலீச்சாமியாரிடம் மக்கள் எப்படி சிக்கித் தவிக்கிறார்கள், நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கிறது என பல விஷயங்களை பேசியிருக்கும் மூக்குத்தி அம்மன். ஆனால், அதையெல்லாம் தள்ளிவைத்து ஒரு கமர்ஷியல் படமாக ஒருமுறை பார்க்கலாம்.

சூரரைப் போற்று

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் சூரரைப் போற்று. கொரோனாவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான படங்களும் பெரிதாக வரவேற்பு பெறாத நேரத்தில், நேரடியாக ஒரு பெரிய பட்ஜெட் படம் ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதென்றால் அது சூர்யாவின் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் கோபிநாத் கதையை மையமாக கொண்டு கமர்ஷியல் சென்டிமெண்ட் மசாலாவோடு கலந்து கொடுத்திருப்பார் இயக்குநர் சுதாகொங்கரா. இந்த வருடத்தில் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்த படம் சூரரைப் போற்று. படமாக, பாடலாக, விஸூவலாக என அப்ளாஸ் வாங்கிய படம்.