ஜெனீவா குறித்த சுமந்திரன் முன்வைத்த யோசனை – கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் நிராகரிப்பு

ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தமிழ்த் தேசிய் கட்சிகள் ஒன்றுபட்டு கையாள்வது சம்பந்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த யோசனைத் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனும் நிராகரித்து விட்டனர் எனத் தெரியவருகின்றது.

இவ்விடயத்தை ஒட்டி மாற்று யோசனை ஒன்றை நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கின்றார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளருக்கும் கவுன்ஸிலின் ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக அனுப்பக் கூடிய நீண்ட நகல் கடிதம் ஒன்றே யோசனைத் திட்டமாக சுமந்திரனினால் முன்வைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தை தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முன்வைக்கலாமா என்பதுதான் சுமந்திரனின் யோசனையாகும். இதனை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடமும், விக்கினேஸ்வரனிடமும் சுமந்திரன் ஒப்படைத்திருந்தார். இதனையே யாழ்ப்பாணத்தில் ஆராய்ந்த கஜேந்திரகுமாரும் விக்கினேஸ்வரனும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.