யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் 500 பேர் தற்கொலைக்கு முயற்சி; அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள்

யாழ். குடாநாட்டின் தற்கொலை முயற்சிகள் கடந்த 4 வருடங்களாக ஐந்நூறைத் தாண்டிய எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைகளைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்திற்குப் பின்னர் வட மாகாணந்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டில் இருந்து எண்ணிக்கை யளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதிலும் வருடாந்தம் 500 ற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2013 ஆம் ஆண்டு 714பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2014 இல் 640பேரும் , 2015 இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக்காணப்பட்டது.

இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் அறுநூறைத் தாண்டியதாக இது இருதுள்ளது . 2019 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள் இதில் 104 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் கூறுகின்றன.

அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர்தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.