அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கும் நோக்கமில்லை – தொடர் புறக்கணிப்பால் சுதந்திரக் கட்சி அதிருப்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் புறந்தள்ளி செயல்படுவதால் கட்சியின் கீழ் மட்ட தொண்டர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்க பாடுபட்டனர். ஆகவே, அவர்கள் கவனிக்கப் படவேண்டியது அவசியம். எமது கட்சியில் வட்டார அமைப்பாளர்கள் 5 ஆயிரத்து 25 பேர் உள்ளனர். ஆகவே , அபிவிருத்தித் திட்டங்களில் இவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை புறக்கணிப்படுவதன் மூலம் இவர்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி ஏற்படும்.

அதேபோன்று பிரதேச சபை உறுப்பினர்கள் 1064 பேர் உள்ளனர். அவர்களையும் அபிவிருத்திகளில் இணைத்துக் கொள்ள அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இவர்களைப் புறந்தள்ளிவிட்டு செயல்படுவது முறையாகாது. கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்கு இவர்களே உழைத்தனர். நாம் கட்சி என்ற அடிப்படையில் பெயரளவில் இந்த அரசாங்கத்துடன் இணையவில்லை. அதனால் கட்சியின் முக்கியஸ்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களை மறந்து அரசாங்கம் பயணிக்க முயற்சித்தால் அரசாங்கத்துடன் நிரந்தரமாக பயணிக்கும் நோக்கம் எமக்கில்லை. ஜனாதிபதியிடம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட நேரம் கேட்டிருந்த போதிலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பஸில் ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். இருப்பினும் அந்தக் கலந்துரையாடலும் பயனளிக்கவில்லை” என்றார்.