விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு ரத்து!

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படங்களான இருமுகன், ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான் என எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், எப்படியாவது ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விக்ரம்.

விக்ரமின் மிகப்பெரிய நம்பிக்கை ‘கோப்ரா’ படத்தின் மீதுதான். அஜய்ஞான முத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் இந்தப் படத்தை மாஸ்டரின் இணை தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது.

விக்ரமுடன் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா மற்றும் கிரிகெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படமானது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிவருகிறது. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதன்பிறகு கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் தற்பொழுது படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. முதலில் ரஷ்யாவில் படப்பிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அது நடக்குமா எனத் தெரியவில்லை.

இப்போதைக்கு ரஷ்யா வேண்டாம், சென்னையிலேயே படப்பிடிப்பை முடித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது படக்குழு. அதன்படி, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சென்னையிலேயே நடக்க இருக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் உடன் நடிக்கும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் விக்ரம்.

கோப்ரா படம் விக்ரமின் 58வது படமென்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்குக் கைவசம், மஹாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது .