அடுத்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ் எது?

நடிகர் மாதவனுக்கு ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘இறுதிச்சுற்று’ படங்கள் மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டானார் மாதவன்.

சமீபத்தில் அனுஷ்காவுடன் மாதவன் நடித்திருந்த ‘நிசப்தம்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது. இந்நிலையில், மாதவனுக்கு அடுத்த ரிலீஸ் ‘மாறா’.

2015ல் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான படம் சார்லி. இந்தப் படத்துக்கு மலையாளத்தில் ஏகபோக வரவேற்பு. நிறைய விருதுகளையும் வென்று, பெரிய வெற்றியும் பெற்றது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் தான் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘மாறா’. படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே மாதவனும், ஷ்ரத்தாவும் விக்ரம் வேதா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம். கூடுதலாக, நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

படத்தில் சில முக்கிய பணிகள் கொஞ்சம் இருப்பதால், படத்தை அடுத்தவருடம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். சொல்லப்போனால், அடுத்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ் மாறா தான். அதோடு, படம் நேரடியாக பிரைம் வீடியோவில் வெளியாகிறது. அடுத்த வருடத்தின் முதல் ரிலீஸ் படமே, ஓடிடிக்கு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.