‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ராவுக்குப் பதில் இவர்தான்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை மரணம் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவருக்கு, மிகப்பெரிய பிரேக் கொடுத்தது விஜய் டிவி தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’.

இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு ஈவிபி கார்டனில் நடந்துவருகிறது. ஸ்டார்ட் மியூசிக் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இரவு நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றபோதுதான், டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு குறித்து ஆர்டிஓ மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான முழுமையான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் தீவிரமான விசாரணைகள் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் சக கலைஞர்கள் சித்ராவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த அஞ்சலி செலுத்தும் வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளியானது. சரி, சித்ராவுக்குப் பதிலாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலில் யார் நடிக்கிறார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. ஏனெனில், முல்லையாக சித்ராவை ரசிகர்கள் பார்த்துப் பழகிவிட்டனர். முல்லையாகவே வாழ்ந்தும் இருப்பார் சித்ரா. அப்படியிருக்கையில், வேறு ஒருவரைக் கொண்டுவரும்போது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என பெரும் குழப்பத்துக்கே ஆளாகியிருக்கிறது தொலைக்காட்சி நிர்வாகம்.

பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சித்ராவுக்குப் பதிலாக முல்லை ரோலில் காவ்யா அறிவுமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யார் இந்த காவ்யா என்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமானவர். சித்ராவுக்குப் பதிலாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பில் தற்போது கலந்துகொண்டு நடித்தும் வருகிறார்.