மஹர சிறையில் நான்கு கைதிகள் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணம் – நிபுணர் குழு நீதிமன்றத்தில் தெரிவிப்பு

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின்போது நான்கு கைதிகள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்தனர் என பிரேத பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளது என நிபுணர் குழு வத்தளை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நிபுணர் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியின்போது 11 கைதிகள் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த கைதிகள் தொடர்பிலான மரண பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தது.

இந்நிலையில் இந்த நிபுணர் குழு உயிரிழந்த 11 கைதிகளில் நான்கு கைதிகளின் மரண பரிசோதனைகளை நிறைவு செய்திருந்தது. இந்த பரிசோதனைகளின் முடிவிலேயே நான்கு கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது என நிபுணர் குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.