யாழ்ப்பாணத்தில் அதிரடி வீதிச் சோதனை ; 3 கிலோ ஹிரோயின் கைபற்றல்! 62 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன் தினம் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3 கிலோ ஹெரோயினுடன் 6 பேரும், ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். தவிர, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு மாகாணப் பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமையவும் யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரிலும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்த விசேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போதே, 3,320 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேரும், ஒரு கிலோ 579 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரும், 2 லீற்றர் 40 மில்லி கசிப்பு, மற்றும் 300 மில்லி சட்டவிரோத சாராயத்துடன் ஒருவருமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர் மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன்,மதுபோதையில் சாரத்தியம் செய்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகளில் மொத்தமாக 62 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 39 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.