சித்ரா தற்கொலையில் அதிரடியாக புதிய திருப்பம்: ஹேமந்த் கைது

தமிழகத்தின் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிகாலை 3 மணியளவில் கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியிருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் எனப் பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர். எனவே இது கொலையா, தற்கொலையா எனக் கேள்வி எழுந்ததுடன், சித்ராவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற குரல்களும் அதிகரிக்கத் தொடங்கின.

இதனிடையே ஹேமந்துக்கு இருந்த கடந்த கால மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தது. தனக்கு இருக்கும் பின்புலத்தை வைத்து அவர் எளிதில் வெளியே வந்துவிடலாம் என்று கூறப்பட்டது. சித்ரா தற்கொலை வழக்கை இணை ஆணையர் மகேஷ்வரி மேற்பார்வையில் துணை ஆணையர், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உள்ளிட்ட டீம் தீவிரமாக விசாரணை செய்ததில், சந்தர்ப்பச்சூழல் எல்லாமே ஹேமந்த் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்களைத் திரட்ட ஏதுவானதாக இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆறு நாட்களாக ஹேமந்த்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேமந்த் சண்டையிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேமந்த் ஐபிசி 306-இன்படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோர் ஆர்டிஓ விசாரணைக்கு நேற்று ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ முன்பு ஆஜராகினர். அப்போது, சித்ராவுக்கு ஹேமந்த் குடும்பத்தின் தரப்பில் வரதட்சணை கொடுமை போன்று ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் தாயார், சித்ராவின் மரணத்துக்கு ஹேமந்துதான், காரணம். எனக்கும் சித்ராவுக்கும் எந்த மன கசப்பும் இல்லை, வரதட்சணை கொடுமை கொடுத்தார்களா, இல்லையா என்பது குறித்தெல்லாம் சித்ராவுக்குத்தான் தெரியும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஹேமந்த் குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் இரவில் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.