கூகுள் சேவைகள் ஸ்தம்பிதம் சைபர் தாக்குதல் காரணமா?

அமெரிக்காவின் பல்தேசிய இணையத் தொழில் நுட்ப ஜம்பாவானாகிய கூகுள் நிறுவனத்தின் சேவைகள் உலக அளவில் இன்று பல மணிநேரம் முடங்கி உள்ளன.இதனால் பல நூறு மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

யூ டியூப்(YouTube) , ஜீமெயில்(Gmail) , மற்றும் கூகுள் ட்ரைவ் (Google Drive) அன்ரொயிட் பிளேய் ஸ்ரோர் (Android Play Store,) கூகுள் மப்ஸ் (Maps) உட்பட தொடர்புடைய பல சேவைகள் முடங்கி உள்ளன.

கூகுள் வரலாற்றில் இத்தகைய சேவை முடக்கம் மிக அரிதான ஒன்றாகும்.

பிரான்ஸில் இன்று காலை முதல் மதியம் வரை 12 மணித்தியாலங்களுக்கு கூகுள் சேவைகளில் குழப்பம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் நாளாந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள் சேவைகளின் இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவர வில்லை.

பராமரிப்புகளில் ஏற்பட்ட தவறா அல்லது பிரமாண்டமான அதன் வலைப்பின்னல் மீது நடத்தப்பட்ட மாபெரும் சைபர் தாக்குதலா காரணம் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் தனிநபர்களதும் நிறுவனங்களினதும் நாளாந்தப் பணிகளை முடக்கியுள்ள இந்த ஸதம்பிதத்துக்குக் காரணம் என்ன என்பதை கூகுள் நிறுவனம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.