தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் ‘தலைவி’ ரிலீஸ்? விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிவரும் படம் ‘தலைவி’. இதை ஏ.எல்.விஜய் இயக்கிவருகிறார். படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். தவிர மதுபாலா, பூர்ணா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவினால் நிறுத்தப்பட்டது. பின்னர், அக்டோபர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டு மாதம் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

“வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இப்படியான வாய்ப்புகள் கிடைக்கும்” என்று படப்பிடிப்பை முடித்த கங்கனா கூறியுள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக படத்தை வெளியிட திட்டமாம்.

அடுத்த வருட ஏப்ரலில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலின்போது தலைவி வெளியாகலாம் என்கிறார்கள். அதோடு, ஏற்கெனவே, ஜெயலலிதா பயோபிக்காக ‘குயின்’ படம் வெப் சீரிஸாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.