யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் 28ஆம் திகதியிலிருந்து ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தில் இம்மாதம் 28 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெங்கு நோய் என்பது கட்டுப்படுத்தக் கூடிய அதே நேரம் ஒரு ஆபத்தான விடயம். ஆகவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதாவது கழிவுகளை அகற்றுவது பெரிய பிரச்னையாக காணப்படுகின்றது. படித்தவர்களிலிருந்து பாமர மக்கள் வரை கழிவகற்றல் விடயத்தில் சிக்கலான நிலை காணப்படுகின்றதை வீதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதாவது வெறும் காணிகளில் குப்பைகளைக் கொட்டி வருகின்றார்கள். இவை தடுத்து நிறுத்தப்படவேண்டும். டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பில் நாம் இன்றுவரை திறமையாகச் செயற்பட்டு வருகின்றோம். எனினும் இனிவரும் காலத்திலும் அவ்வாறு செயற்படு வதன் மூலம் தான் இதனைக்கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஏனெனில் எமக்கு இன்னும் சிவப்பு எச்சரிக்கை வரவில்லை. இருப்பினும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்து வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்” என்றார்.