நாட்டில் நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா தொற்று – இரண்டு பேர் மரணம்

நாட்டில் நேற்று மட்டும் 760 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று தொற்றாளர்களாக கண்டறியப்பட்டவர்களில் 551 பேர் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 81 பேர் சிறைச்சாலைக் கொத்தணியில் உள்ளவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 473 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரை 23 ஆயிரத்து 304 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது 8 ஆயிரத்து 684 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் 485 பேர் கொரோனா தொற்று சந்கேத்தில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனினும் கொரோனா தொற்றால் இதுவரை 147 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை நேற்று சனிக்கிழமை கோவிட் -19 நோயால் இருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149ஆக உயர்வடைந்துள்ளது.

55 மற்றும் 66 வயதுடைய ஆண்கள் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 32 ஆயிரத்து 135 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 ஆயிரத்து 304 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.