பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி – மோடி உட்பட பலரும் வாழ்த்து

நடிகரும் ரஜினி மக்கள் மன்ற தலைவருமான ரஜினிகாந்துக்கு இன்று 70ஆவது பிறந்தநாள். இதை ஒட்டி அவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலை உலகப் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ’என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டபோது வரவேற்ற ஓ பன்னீர்செல்வம், ரஜினியோடு கூட்டணி அமையும் வாய்ப்பு உண்டு என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலம் ரஜினியைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில்… “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாகவே ரஜினி தனது பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டார். ரசிகர்கள் தன்னை வாழ்த்த படையெடுத்து வருவார்கள் என்பதால் அவர் எப்போதுமே தனது பிறந்தநாளை எளிய முறையில் தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களிலோ, அல்லது இமயமலையிலோ கொண்டாடுவார்.

ரஜினி தனது அரசியல் அறிவிப்பை உறுதிசெய்து அதன் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அவரை சந்திக்க கூடுதல் உற்சாகத்தோடு காத்திருந்தனர். ஆனால் கொரோனோ தொற்று காலம் என்பதாலும், அண்ணாத்தே திரைப்பட ஷூட்டிங் இருப்பதாலும் ரஜினி சென்னையில் இல்லை என்று அவரது தரப்பினர் நேற்று முதலே மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். இன்று காலை ரஜினி வீட்டின் முன் திரண்ட ரசிகர்களிடமும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி எங்கே இருக்கிறார் என்று நாம் விசாரித்தபோது… “நேற்று இரவு தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து புறப்பட்டு கேளம்பாக்கத்தில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இரவு 12 மணியளவில் தனது பிறந்த நாளை குடும்பத்தினர் பேரக் குழந்தைகளோடு கொண்டாடியுள்ளார். இன்று முழுவதும் அவர்களுடன் செலவிடும் ரஜினிகாந்த் டிசம்பர் 13ஆம் தேதி பிற்பகலில் தான் அண்ணாத்தே படப்பிடிப்புக்காக விமானம் மூலம் புறப்படுகிறார்”என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.