தனித்துப் போட்டியா? விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை!

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஜனவரி மாதம் நடக்கும் பொதுக் குழுவில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடத் தேமுதிக தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் விஜயகாந்த் தலைமையில் டிசம்பர் 13ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அதில் வலியுறுத்தப்பட்டது.

அதிமுக, திமுக, அமமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் என பெரும்பாலான கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளைத் துவங்கிவிட்ட நிலையில், தேமுதிக இதுவரை எந்தப் பணிகளையும் தொடங்கவில்லை. ஆகவே, ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான குழுக்கள் அமைப்பது பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக விஜயகாந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் அவரைக் காண்பதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆனாலும், வீட்டிலிருந்தபடி காணொலி காட்சி வழியாக விஜயகாந்த் மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.