எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்த ஐ.தே.க.வினால் மட்டும்தான் முடியும் – ரூவான் விஜயவர்த்தன

அரசாங்கத்தை கைப்பற்ற வலிமையான அரசியல் சக்தியை நிறுவ வேண்டுமானால், எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்த வேண்டியது ஐ.தே.க.தான் என அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ருவான் விஜேவர்தன மேலும் கூறியுள்ளதாவது :-

“அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதற்கு ஒரு பொதுவான தளம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும், ஐக்கிய தேசியக்கட்சிதான் அத்தகைய அரசியல் சக்திக்கு தலைமை தாங்க வேண்டும்.

அத்துடன் எங்களது கட்சியில்தான், முதிர்ச்சியடைந்த தலைவர்களைக் கொண்டுள்ளது. அவர்களால் ஒரு பெரிய கூட்டணியை வழிநடத்த முடியும். இதேவேளை ஐ.தே.கவை புதுப்பிக்க அனைத்து கட்சி ஆர்வலர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ள தீர்மானித்துள்ளோம். மேலும் மக்கள் பலர், அரசாங்கத்துக்கு எதிரான ஒரு மாற்று சக்தியைக் கோருகின்றனர். எனவே இந்தத் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் கட்சியை புதுப்பிக்க வேண்டிய நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.