சித்ராவின் மரணம் தற்கொலையே?

நடிகை சித்ரா தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பு இருப்பதாகப் பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவக் குழு தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘முல்லை’ என தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தன்று படப்பிடிப்பு முடிந்த பிறகு நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் ஹேமந்த் ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சித்ராவின் முகத்தில் காயங்கள், நகக்கீறல்கள் இருந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவரது தந்தை கூற, சித்ராவின் தாயார் ஹேமந்த் ரவி தான் கொலை செய்திருப்பார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதன் முடிவில் சித்ராவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று முற்பகலில் பிரேதப் பரிசோதனை முடிந்து, சித்ராவின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காகச் சிறிது நேரம் வைக்கப்பட்டது. அப்போது சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய சித்ராவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனிடையே சித்ரா தற்கொலை செய்திருக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாகப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவக் குழு தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்க ஒரு சில தினங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில், மருத்துவர்கள் போலீசாரிடம் சில தகவல்களை வாய்மொழியாகக் கூறியிருக்கின்றனர். அதாவது, “சித்ரா தற்கொலை செய்ததற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மருத்துவர்கள் குழு கூறுகிறது. சித்ராவின் செல்போன் அழைப்புகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அவர் நீண்ட நேரம் அம்மாவுடன் பேசியிருக்கிறார்.” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஹேமந்த் ரவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், விசாரணைக்கு பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.