சட்டமன்றத் தேர்தல்: பிரச்சாரத்துக்குக் களமிறங்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசனின் பிரச்சாரப் பயணம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்தியக் குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தார். மக்கள் நீதி மய்யத்துக்குக் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன.

இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம். கழகங்களுடன் கூட்டணி இல்லை, மூன்றாவது அணிக்கான தகுதி தங்களுக்கு இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் கமல்ஹாசன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தைத் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் நேற்று (டிசம்பர் 10) வெளியிட்ட செய்திக் குறிப்பில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற உன்னதமான நோக்கத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கமல்ஹாசன் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13,14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்துகிறார் என்று அறிவித்தார் மகேந்திரன்.

கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்துகொண்டு கமல்ஹாசனின் சுற்றுப்பயணத்தைச் சிறப்பிக்க வேண்டும். அனைவரும் கொரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், அதை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.