கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி ஓட முயன்றவர் பருத்தித்துறையில் கைது

திருகோணமலையில் இரட்டைக் கொலை புரிந்தார் என வழக்கு விசாரணையை எதிர் நோக்கும் ஒருவர் கடல் வழியாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த நவரத்தினராசா குகனேஸ்வரன் என்பவரே பருத்தித்துறைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் இரட்டைக் கொலை புரிந்தமைக்கான வழக்கு இடம்பெறும் நிலையில் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் பருத்தித் துறைப் பகுதியில் ஓர் படகு ஓட்டியின் உதவியுடன் அவர் இந்தியாவிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார் எனக் கூறப்படுகின்றது.

அதற்காகப் படகில் ஏறிப் பயணித்த நேரம் கடலில் சுற்று ரோந்து நடவடிக்கையில் இருந்த கடற்படையினர் இதனை அவதானித்துள்ளனர். கடற்படையினர் நெருங்கி வருவதனை அவதானித்த படகு ஓட்டி கரைநோக்கித் தப்பி ஓடியுள்ளார். இதனால் கரையோரம் நின்ற கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதன்போது கரையை அடைந்த கடற்படையினர் படகு ஓட்டியையும் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயன்ற வரையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது இலங்கை, இந்திய நாணயங்கள், படகு, இயந்திரம் என்பனவும் சான்றுப் பொருள்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்டவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.