சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தின் பின்னணி; உண்மையில் தற்கொலைதானா?

தமிழகத்தின் பிரபல சின்னத் திரை நடிகை சித்ரா எனும் சித்துவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த காமராஜ் (ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ) என்பவரின் மகள் நடிகை சித்ரா (29). சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பில் நேற்று கலந்துகொண்டார் சித்ரா. நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து திரும்ப தாமதமானதால், நாசரேத் பேட்டை எனும் பகுதியில் பெங்களூர் பைபாஸில் உள்ள விடுதியில் அறை எண் 113ல் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியுள்ளார்.

இரவு 2.30 மணிக்கு தான் படப்பிடிப்பு முடிந்து வந்ததால், வீட்டுக்குச் செல்ல நெடுந்தூரமென்பதால், இரவு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், அதிகாலையில் நடிகை சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, நாசரேத் பேட்டை காவல்துறை ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான போலீஸார் சித்ராவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிஜத்திலும் தற்கொலையா, இல்லை வேறு ஏதும் காரணமா எனும் கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. என்னவென்றால், கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவருடன் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தான், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால், வருங்கால கணவர் ஹேமந்த் ரவி அடிக்கடி சித்ரா நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து செல்வாராம்.

இந்நிலையில், சித்ரா தங்கியிருந்த விடுதியில் சித்ராவின் குடும்பமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, திருமணத்தின் மீது பல குழப்பங்கள் இவருக்கு இருந்ததாக நெருங்கிய நடிகர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்திவிடுவோமா என்றெல்லாம் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் சித்ரா. அதோடு, சித்ரா நடிக்கும் சீரியல் குறித்த விமர்சனங்கள் ஹேமந்த் வீட்டில் இருந்திருக்கிறது. இவர் நடிக்கும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், திருமண தேதி குறித்த பிரச்னை ஒன்றிரண்டு நாளாக போய்க் கொண்டிருந்ததாம். அதைப்பற்றி பேசுவதற்காக ஹேமந்த் நாசரேத் பேட்டைக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கான மனநிலையில் அவர் எப்போதும் இருந்ததில்லை என்கிறார்கள் நெருங்கிய நண்பர்கள். அதோடு, விடுதி அறையில் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அதற்கான காரணம் என்ன? தற்கொலை செய்துகொண்டால் கழுத்தில் காயங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. முகத்தில் சில காயங்கள் எப்படி வந்தது? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

நடிகை சித்ரா சைக்காலஜி படித்தவர். தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் பலருக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறார். தைரியமான பெண் என்றே பலர் கூறுகிறார்கள். இளம் வயதில் இப்படியான ஒரு முடிவு நிச்சயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.