கட்சிக்கு வழிகாட்டும் குழு: ரஜினி முக்கிய ஆலோசனை!

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவரும் விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்க இருப்பவருமான ரஜினிகாந்த் இன்று டிசம்பர் 9ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

கடந்த டிசம்பர் 4ம் தேதி விரைவில் அரசியல் கட்சியை துவக்கி இருப்பதாக அறிவித்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக அப்போது வரை பதவி வகித்த அர்ஜுன மூர்த்தியை நியமிப்பதாக அறிவித்தார். ரஜினியின் அறிவிப்புக்குப் பிறகு அர்ஜுன மூர்த்தி பாஜகவிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும் அவரது அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும் கடந்த பல மாதங்களாகவே கராத்தே தியாகராஜன், செ.கு. தமிழரசன் போன்ற தேர்தல் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டவர்களும், அர்ஜுன் சம்பத் போன்றோரும் ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பேசி வந்தார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் அர்ஜுன மூர்த்தி நியமனம் அவர்களுக்கு மட்டுமல்ல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. ரஜினியோடு கடந்த பல மாதங்களாக அரசியல் பற்றி விவாதித்து வந்த யாருக்கும் ரஜினி அன்று கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பது தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளும் இதுபற்றி அதிருப்தியில் இருக்கிறார்கள்.

“தமிழருவி மணியன் ரஜினிக்காக அண்மைக் காலமாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரை கூட ஒரு வகையில் எங்களுக்குத் தெரியும், நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ரஜினியால் அறிவிக்கப்படும் வரை அர்ஜுன மூர்த்தி யாரென்று எங்களுக்குத் தெரியாது. ரஜினி மக்கள் மன்றத்தில் 40 வருடங்களாக சிறந்த முறையில் செயல்பட்டு வரும் பலர் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி இப்படி வேற்று கட்சியில் இருந்து ஒருவரை ஒருங்கிணைப்பாளராக நியமித்தது மாவட்ட செயலாளர்கள் உட்பட மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. நிர்வாகிகளின் இந்த அதிர்ச்சியை சுதாகர் மூலமாக ரஜினிக்கும் கொண்டு சென்றிருக்கிறோம்”என்கிறார்கள் ரஜினி மன்றப் பிரமுகர்கள்.

இதையடுத்து தான் ரஜினி இன்று அர்ஜுன மூர்த்தியையும் தமிழருவி மணியன் ஐயும் திருமண மண்டபத்துக்கு அழைத்து ஆலோசித்துள்ளார். இந்த ஆலோசனையில் ரஜினியின் அரசியல் குரலாக ஒலித்த முக்கிய ஆளுமைகளையும், மக்கள் மன்ற பிரமுகர்களயும் உள்ளடக்கிய வழிகாட்டும் குழு அமைக்கலாமா என்று விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. விரைவில் ரஜினியிடம் இருந்து கட்சி தொடர்பான குழுக்கள் வரலாம் என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் சொல்கிறார்கள்.