கொரோனா மருந்துக்காக குவிந்த மக்களால் கேகாலைக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் சுதர்ஷினி

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருந்தைப்பெறுவதற்கு ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால் கேகாலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு விதி முறைகள் மீறப்பட்டிருந்தால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“பொதுமக்கள் மிகப்பெரிய ஆபத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மருந்து கொரோனாவைக் குணப்படுத்தக்கூடியது என்பது இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சோதனைகள், ஆய்வுகள் இடம்பெறுகின்றன. இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்டால் நாம் பொதுமக்களுக்கு அறிவிப்போம். அதுவரை பொதுமக்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.

கொரோனா வைரஸ_க்கான எந்த மருந்தும் விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியம். இந்த மருந்து இன்னமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே மக்கள் மருந்துகளைப் பயன்படுத்த முன்னர் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

மக்கள் இந்த நெருக்கடியான தருணத்தில் எச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் அதனால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்” என்றார்.