கொரோனா ஆயுர்வேத மருந்து விநியோகம் உடனடி நிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

கேகாலையில் வைத்தியர் ஒருவர் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவித்து விற்பனை செய்த மருந்து விநியோகிக்க பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.

இந்த மருந்தைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சமூக விலகல் விதி முறைகளை மீறி ஹெட்டிமுல்லைப் பகுதியில் ஒன்றுகூடியதால் கொரோனா பரவல் ஆபத்து தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலாளர் மருந்து விநியோகிக்க பிரதேசசெயலர் தடை விதித்துள்ளார்.

தன்னை மருத்துவர் என அழைத்துக் கொள்ளும் தம்மிக பண்டார என்பவர் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து தன்னிடமுள்ளது எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து அதனைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று ஹெட்டிமுல்லை பகுதிக்குச் சென்றனர்.

பெருமளவு மக்கள் அப்பகுதிக்குச் செல்லத் தொடங்கியதால் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர். சமூக ஊடகங்களில் இது தொடர்பில் படங்களும் கடும் விமர்சனங்களும் வெளியானதுடன் பொதுச்சுகாதாரப் பணியாளர்களும் இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்துள்ளது என எச்சரித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மருந்து வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளார்.