பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விருப்பம் – மன்னாரில் பிரதமர் மஹிந்த

ஒவ்வொரு நபரும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பான நாட்டில் வாழ விரும்புவார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவார்கள். இதைப் பற்றி யோசித்த மக்கள் கடந்த தேர்தலில் எங்களுக்கு மிக உயர்ந்த மக்கள் ஆணையை வழங்கினர் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“நாட்டின் தேசிய மின் கட்டமைப்பிற்கு 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் இலங்கையின் பாரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

2008 ஆம் ஆண்டளவில் மடு தேவாலயத்துக்குச் செல்லும் வீதி புனரமைக்கப்பட்டு, மடு திருவிழாவுக்கு நாட்டின் தலைவராக நான் வரவிருந்தபோது, இங்கு வருவதற்கு விடுதலை புலிகளின் அனுமதி பெறவேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவருக்கு மடு தேவாலயத்திற்கு வருவதற்கு பயங்கரவாதிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது. இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும், கிழக்கிலிருந்து மேல் மாகாணங்களுக்கும் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய யுகமொன்றை அமைப்போம் என நான் அன்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

இன்று இந்த தம்பபவனி மின் உற்பத்தி நிலையம் அந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டது அல்லவா என்று நான் உங்களிடம் வினவுகின்றேன். 2005ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரும்போது இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 65 வீதமானோருக்கு மாத்திரமே மின்சாரம் காணப்பட்டது. 2015ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 98 வீதமானோருக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க எமக்கு முடியுமானதாயிற்று. இதன் விளைவாக, நகரத்தை போன்றே கிராமத்திலும் மின்குழிழ்கள் ஒளிரும் ஒரு உருமாறும் சகாப்தத்தை நாங்கள் உருவாக்கினோம்” என்றார்.