90 வயது மூதாட்டிக்கு முதல் தடுப்பூசி!

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நாடளாவிய பணி பிரிட்டனில் இன்று தொடங்கியுள்ளது.

“பைசர்-பயோஎன்ரெக்” (Pfizer-BioNTech) தடுப்பூசி முதலாவதாக 90வயதுடைய மார்கிறட் கீனன் (Margaret Keenan) என்ற மூதாட்டிக்கு இன்று காலை செலுத்தப்பட்டது.

மத்திய இங்கிலாந்தில் கொவென்றியில் (Coventry) உள்ள போதனா மருத்துவமனையில் கீனனுக்கு தாதி ஒருவர் தடுப்பூசியைச் செலுத்தினார். மருந்தைப் பெற்றுக் கொண்டு அவர் சக்கர நாற்காலியுடன் வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்தோர் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.

“தடுப்பூசி முதலில் எனக்குக் கிடைத்திருப்பதை அரிய வாய்ப்பாக உணர்கின்றேன்” என்று கீனன் அங்கு தெரிவித்தார்.

அடுத்த வாரம் 91 ஆவது வயதை எட்டவுள்ள மார்கிறட் கீனனே உலகில் “பைசர்-பயோஎன்ரெக்” வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்ட முதல் ஆள் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இரண்டாவது தடுப்பூசி அதே மருத்துவமனையில் வில்லியம் சேக்ஸ்பியர் என்னும் 81 வயதான வயோதிபருக்குச் செலுத்தப்பட்டது.

21 நாட்களுக்குப் பின்னர் இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன், லண்டன் மருத்துவமனை ஒன்றுக்கு விஜயம் செய்து தடுப்பூசி ஏற்றப்பட்ட முதல் நோயாளிகளைப் பார்வையிட்டார்.

பைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்காக கடந்தவாரம் அனுமதிக்கப்பட்ட பிறகு அதனைத் தனது மக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள முதலாவது நாடு பிரிட்டன் ஆகும்.