விஜய்யுடன் மோத விரும்பும் சிம்பு… பொங்கல் ரிலீஸ்?

கொரோனாவுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும், இன்னும் திரையரங்கில் ரெகுலராக மக்கள் வரவில்லை. கொரோனா அச்சத்தினால் இன்னும் திரையரங்குகள் கலகலப்பாகவில்லை. ஆனால், திரையரங்குக்கான மிகப்பெரிய ரிலீஸாக, புத்துயிர் கொடுக்கப் போகும் படம் ‘மாஸ்டர்’.

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். நாயகியாக மாளவிகா மோகனன், பிற நடிகர்களாக சாந்தனு, கெளரி கிஷண், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மாஸ்டர் படத்தை 1000 திரையரங்குகளில் வெளியிடத் திரைத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். இதனால், கொஞ்சம் தெம்பாக எழுந்து உட்கார்ந்திருக்கிறார்கள் திரையரங்கத்தினர். மாஸ்டர் ரிலீஸாவதால், பொங்கலுக்கு வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. வெளியாகும் என்று அறிவித்திருந்த அனைத்துப் படங்களுமே பின்வாங்குகிறது. இந்த நிலையில், விஜய்யுடன் மோதலுக்குத் தயாராகிறார் சிம்பு.

மாஸ்டருக்குப் போட்டியாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய விரும்புகிறாராம் சிம்பு. தயாரிப்பு தரப்பு விரும்பாத நிலையிலும், பொங்கலுக்கு வந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிம்பு என்று சொல்லப்படுகிறது.

பொங்கலுக்கு சிம்பு படமும் வெளியாக வாய்ப்பிருக்கிறது என, அதற்கு ஒரு கணக்கும் திரையுலகில் சொல்லப்படுகிறது. என்னவென்றால், மாஸ்டர் படம் பொங்கல் சிறப்பாக ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது. எப்படியும் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே 1000 திரையரங்கில் ரிலீஸாகும். அதன் பிறகு திரையரங்குகள் குறைய தொடங்கிவிடும். எவ்வளவு பெரிய படமென்றாலும் இதுதான் சூழலாக இருக்கும். அப்படி இருக்கையில், இரண்டு நாட்கள் கழித்து பொங்கல் தினமான ஜனவரி 15இல் சிம்புவின் ஈஸ்வரன் வெளியாக வாய்ப்பிருக்கிறதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே, கடந்த 2019 பொங்கலில் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் இரண்டு நாட்கள் இடைவெளியில் வெளியானது. அப்படி வெளியாகும்போது பட வசூலிலும், திரையரங்கம் பிரிப்பதிலும் சிக்கல் இருக்காது என்றே சொல்கிறார்கள்.

விஜய் படத்தோடு மற்ற நடிகர்கள் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கும் வேளையில், சிம்பு பொங்கலுக்கு வர விரும்புகிறார். ஒன்றுக்கு இரண்டு படங்களாகப் பொங்கல் விடுமுறைக்கு வெளியானால் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எது எப்படியோ, திரையரங்கு மீண்டும் பழைய மாதிரி இயங்கினால் ரசிகர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சிதான்.