மஹர சிறைக் கலவரத்தினால் 10 கோடி ரூபா சொத்து இழப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, பத்துக் கோடி ரூபா அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன என்றும் இழப்புக் கணிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 11 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் இன்னும் றாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்த ஏனைய 9 பேர் கொரோனா நோயாளர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது தொடர்பான தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேவேளை இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு கைதி, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.