போராளியையும் நினைவு கூரலாம் – பொன்சேகாவின் கருத்துக்கு மனோ பாராளுமன்றத்தில் பதிலடி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாராளுமன்றத்தில் நேற்று பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோகணேசன்.

மனோ கடும் சினத்துடன் சிங்கள மொழியில் உரையாற்றுகையில் சரத் பொன்சேகாவும் சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியினரும் மனோவின் உரையை கவனமாக செவிமடுத் துக்கொண்டிருந்தனர்.

மனோ கணேசன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வருமாறு,

“2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வடக்கு- கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பிரசாரத்தை முன்னெடுத்தவன் நான். ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பொன்சேகாவை கைவிட்டுச் செல்ல கடைசிவரை நான் அவருடன் இருந்தேன். இன்றும் பொன்சேகாவை மதிக்கின்றேன். ஆனால், அவர் நன்றி மறந்து உரையாற்றியுள்ளார்.

புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பை இங்கு நினைவு கூரமுடியாது. புலிக்கொடி மற்றும் புலிக்கொள்கைகளை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தமுடியாது. ஆனால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அது போராளியாக இருந்தால்கூட நினைவு கூரலாம்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதால் அதனை நீக்குமாறு கோரி தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நான் கூறிய தகவலை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல், மேல் நோக்கி பார்த்து உமிழ்வது போல் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.

நினைவேந்தல் குறித்து நான் வெளியிட்ட கருத்தையும், மாவீரர் நாள் நினைவேந்தலையும் தொடர்புபடுத்தி, மனோவின் கருத்து எமது கட்சியின் கருத்து அல்ல எனவும் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியை நாம்தான் உருவாக்கினோம். பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறுபையன் கிடையாது. ஜே.வி.பிக்கும், புலிகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு குறித்து எமக்கு எவரும் பாடம் எடுக்கவேண்டியதில்லை.

அதேபோல புரெவி புயல் மாவீரர் நாளன்று வந்திருந்தால் மகிழ்ச்சி என்ற தொனியில் பொன்சேகா வெளியிட்ட கருத்தும் தவறானது. என்னை அமைச்சர் ஒருவர் முட்டாள் என விமர்சித்தார். நீங்களும் அந்த நிலைக்கு விழுந்து விடாதீர்கள். மாவீரர் தின நிகழ்வில்கூட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ்வதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது என்ற விடயத்தையே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரச தொலைக்காட்சியொன்று அதனை பெருப்பித்து மக்களை திசைதிருப்பும் விதத்தில் செய்தி வெளியிட்டது” என்றார்.