20 ஆவது திருத்தத்தின் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிறுவும் முனைப்பில் அரசாங்கம் – கஜேந்திரகுமார்

20ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை இணைத்துக்கொண்டு இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் தமிழர்களை புறக்கணித்தே உருவாக்கப்பட்டதுதான் வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்து கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு தனி ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் முனைப்பில் அரசாங்கம் செயற்படுகின்றது எனவும் இது நாட்டில் ஒரு பாசிசவாத ஆட்சியை நிலை நிறுவத்துவதையே உள்நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த செயற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மேலும் நசுக்கும் ஒரு நடவடிக்கையாகவே தாம் பார்க்கிறோம் எனக் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் செயற்பாட்டுக்குத் தமது கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதோடு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மேற்கொள்ளளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுவாக 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஒன்றாகவே உள்ளதுடன் நாட்டில் காணப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களின் சுயாதீனத்தன்மை எதிர் வரும் காலத்தில் கேள்விக்குறியாகும் வகையில் அதற்கான பதவி நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற ஜனநாயகமும் கேள்விக்குறியாகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.