வடக்கு பாடசாலைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் – மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் நவம்பர் 24ஆம் திகதி மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் இரண்டு வாரங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு அமைய அந்த மாவட்டப் பாடசாலைகள் நவம்பர் 24ஆம் திகதி முதல் மூடப்பட்டன.

வடமாகாணத்தில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி ஏற்பட்ட புரெவி புயலால் நவம்பர் 3ஆம், 4ஆம் திகதிகளில் மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் ஆளுநரின் அறிவிப்புக்கு அமைய விடுமுறை வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்கள் அதிகளவு மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளத்தால் நேற்றுத் திங்கள்கிழமையும் இரண்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பாடசாலைகள் இன்று இடம்பெறும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.