திருமணத்துக்குப் பிறகு காஜல் நடிக்கும் படம்

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் வெளியான கடைசி படம் கோமாளி. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்துவருகிறார்.

இந்தியன் 2 படம் எப்போது துவங்கும் என்பதே தெரியாத நிலையில், அடுத்தப் படத்திற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார் காஜல். இவர் அடுத்ததாக இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படமான ‘கோஸ்டி’ படத்தில் தான் காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.

முந்தைய இரண்டு படங்களுமே காமெடி ஜானரில் எடுத்த இயக்குநர் கல்யாண், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தை ஃபேண்டஸி ஹாரர் ஜானரில் எடுக்க இருக்கிறார். இந்தப் படம் நாயகி முக்கியத்துவம் கொண்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் தான் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, காஜல் நடிப்பில் உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தப் படத்தில் 20-க்கும் மேல் காமெடி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.