உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – நாமல் உறுதி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை சுமுகமாக இடம்பெற்று வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிரணிப் பிரமுகர் நிரோன் பெர்னாண்டோவின் உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நாமல் ராஜபக்r அங்கு மேலும் கூறியுள்ளவை வருமாறு –

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிரணியினருக்கு தற்போது இருக்கும் அக்கறை, அன்றே இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கா. எதிரணியை சேர்ந்தவர்கள்தான் கொழும்பு பேராயரை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி தற்போது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைவரும் எந்தவொரு வேறுபாடும் இன்றி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது எமது பொறுப்பாகும். இதற்கு எதிரணியினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

பேராயரை விமர்சித்தவர்களைக் கூட, எதிரணியினர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவந்துள்ளார்கள். நாம் அவ்வாறு செயற்பட்டவர்கள் அல்லர். எனவே, இந்த விடயத்தில் எமது அரசாங்கத்தை சந்தேகம் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.