தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றம் வருவதைத் தடை செய்ய வேண்டும் – சரத் வீரசேகரா பேட்டி

“சிங்களவர்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும்” என வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

“போர் முடிந்தபோது மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார். அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார். அவர்களை மன்னித்தார். தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது.

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது போல், பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் கெமரூஜ் கட்சி காணாமல் போய் விட்டது. சதாம் ஹ_சைன் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து அவரது பாத் கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடை செய்யப்பட்டது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நேர்ந்திருக்க வேண்டும்.

கடந்தகாலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார் கள். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார். அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார். தனது பாதுகாப்பிற்கு அளிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது.

அதன் பின்னர் அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனக்கான சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார். சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதைதடை செய்யவேண்டும்” என்றும் கூறினார்.