புலம்பெயர் தமிழர் முதலீடு செய்ய தெற்கிலும் வாய்ப்பு வழங்குவோம் – விமல் வீரவன்ஸ

வடக்கு – கிழக்கில் பிரதான தொழில்சாலைகளை மீண்டும் பலப்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரமல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்கத் தயாராகவுள்ளோம்.

வடக்கு – கிழக்கிலுள்ள தொழில்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வாழைச்சேனை தொழில்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழில்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழில்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழில்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பரந்தன் இரசாயன தொழில்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முறையான சூழலியல் ஆய்வுகளை செய்தும்,சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டும் அதற்கு ஏற்றால் போல் இரசாயன வலயம் உருவாக்கப்படும். இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு – கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு-கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை” என்றார்.

இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையே வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் முதலீடுகளைச் செய்ய முன்வராமைக்குக் காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.