அரசு மீதான நம்பிக்கையீனமே தமிழர்களின் முதலீட்டுக்கு தடை – சபையில் சிறீதரன் எம்.பி.

“வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக இருந்தாலும், அவர்களுக்கு இலங்கை அரசின் மீதான நம்பிக்கை இன்மையே பிரச்னையாக உள்ளது. எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். மேலும், யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஆனால், யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் இராணுவ முகாமே உள்ளது.

முடக்கப்பட்ட பரந்தன் தொழிற் சாலையை கைத்தொழில் பேட்டையாக மாற்றவும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இயங்கச் செய்யவும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது தமிழ் மக்கள் தயாராகவுள்ளனர். எனினும், அதனை தடுக்கும் சக்திகளே அதிகமாகும். வடக்கிலோ, கிழக்கிலோ கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதனால் குறைந்தது இருபதிற்கும் குறையாத தொழில் முயற்சி உருவாக்கப்படும். எமது மக்களின் விருப்பம் இது” என்றார்.