இராணுவத்தின் புதிய நுட்பங்களே போர் வெற்றிக்குக் காரணம் – பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா

நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது 45 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இராணுவத்தில் புதிய நுட்பப்பயற்சிகளை வழங்கியமையே யுத்த வெற்றிக்குக் காரணமாகும். நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டு வந்தேன். திட்டமிட்ட செயல்பாடுகளே அதற்குக் காரணமாகும். மேலும், இறுதி யுத்தத்தின்போது 45 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். ஐந்து அல்லது ஆறாயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

ஆனாலும், 2 இலட்சத்து 70 ஆயிரம் பேரைப் பாதுகாக்க முடிந்தது. பயங்கர வாதத்தில் ஈடுபட்ட 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்” என்றார்.