பிரான்ஸ் நாட்டில் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக இலவச ஊசி, ஆனால் கட்டாயம் அல்ல!

நாட்டு மக்கள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் விவரங்களை பிரெஞ்சு அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் அல்ல. ஆனால் சகலருக்கும் அது இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடெங்கும் தடுப்பூசி ஏற்றும் இந்த மாபெரும் சுகாதார நடவடிக்கைக்குப் பொறுப்பாக பிரபல நோய் எதிர்ப்பியல் (Immunologist) நிபுணரான மருத்துவப் பேராசிரியர் அலன் பிசெர் (Alain Fischer) அவர்களை அரசு நியமித்திருக்கிறது.

தடுப்பூசி ஏற்றும் பணி ஜனவரி 2021 முதல் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும். அந்த மாதம் ஒரு மில்லியன் பேருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் ஊசி செலுத்தப்படும்.மூதாளர் இல்லங்களில் வசிப்போர் இதில் அடங்குவர். நோயாளர்கள் மற்றும் பலவீனமானவர்களுக்கு பெப்ரவரி மாதத்திலும் ஏனையோருக்கு படிப்படியாக வரும் வசந்த காலப்பகுதியிலும் ஊசி போடப்படும்.
நாட்டு மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசியை வழங்குவதற்காக 2021 சமூகப் பாதுகாப்பு நிதிப் பாதீட்டில் 1.5 பில்லியன் ஈரோக்கள் ஒதுக்கப்படுகிறது.

ஒருவர் சில வார இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் ஏற்றிக் கொள்வது அவசியம் என்பதால் 100 மில்லியன் பேருக்கு என்ற கணக்கில் 200 மில்லியன் தடுப்பூசி புட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

அமெரிக்கா – ஜேர்மனி கூட்டு மருந்துத் தயாரிப்பில் உருவான “பைஸர் – பயோஎன்ரெக்” தடுப்பூசியே (Pfizer / BioNTech vaccine) முதலில் மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.

வெளிப்படைத் தன்மை தொடர்பான அரசமைப்புச் சட்டங்களுக்கு அமைய தடுப்பூசி ஏற்றும் திட்டம் இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு விடப்படும்.

தடுப்பூசியின் அவசியத்தையும் அதன் நம்பகத் தன்மையையும் அனைத்து மருத்துவப்பணியாளர்களும் பொது மக்களுக்கு விளக்கும் வகையில் கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற் திட்டத்துக்கு கல்வியியலாளர்கள், அறிவியல் நிபுணர்களது சகலரதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.