சிறைப் படுகொலைகள் தமிழர்களுக்கு புதிதல்ல – மஹர சம்பவம் குறித்து மனோ கணேசன்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறைச்சாலைப் படுகொலைகள் புதியவையல்ல என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு;

“800 கைதிகளை வைக்கவேண்டிய இடத்தில் 3000 கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். இதுபோன்ற இடங்களில் இலகுவாக கலவரம் ஏற்படும். அது மாத்திரமல்ல பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விசாரணைகள் கூட முடிவடையாத நிலையில் புதிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

ஒரு நாட்டிலுள்ள அரசு கோமாளியைப் போன்று கேலி செய்துகொண்டிருக்கின்றது. மஹர சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் குழுக்களின் விசாரணை முடிய முன்னரே அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை அழைத்து விசாரணை செய்யவேண்டும்.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் கைதிகள் கொல்லப்பட்டனர். விசாரணைகள் முடிவடைந்தும் அந்தக் கொலைகளுக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை” என்றார்.