ஐ.நா. தீர்மானத்தின்படி உயிர் நீத்தவர்களுக்கான கடமையைச் செய்ய அனுமதி வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

“இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர்நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்.

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும் ஒதியமலை பகுதியில் 32பேரும் செட்டிகுளம் பகுதியில் 22பேரும் மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த் ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர்.

இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும் வழமைபோன்று உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்,செட்டிகுளம் பகுதியில் பொலிஸார் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துச் சென்றிருக்கின்றார்கள்.

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக பொலிஸார் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக் கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர்நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது என்றார்.