மஹர சிறைக் கலவரம் குறித்து உண்மைகள் வெளிவரவேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வலியுறுத்து

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நெல்சன் மண்டேலா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

மஹர சிறைச்சாலை அமைதியின்மை குறித்த கரிசனையை வெளிப்படுத்தி தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அதில், சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை மற்றும் அதனால் கைதிகள் சிலர் மரணமடைந்துள்ளமை தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், உரிய விசாரணைகளின் ஊடாக இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.