அரசியல் யாப்பு உருவாக்கத்தக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் குழு – நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்

கார்த்திகை தீபத்திருநாளில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு அரசுக்கு கடிதம் எழுதுவது என நேற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானத்தின் இல்லத்தில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கீடு தினத்தன்று வடக்கு மாகாணத்தில் தீபம் ஏற்ற முற்பட்ட பொதுமக்கள் மீது அடாவடியில் ஈடுபட்ட இராணுவத்தினரின் செயற்பாட்டை கண்டித்து அரசுக்கு இன்று கடிதம் அனுப்ப உள்ளதாகவும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு மிகவிரைவில் கூடி அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்