அரசியல் தலையீடுகளிலிருந்து நீதித்துறை பாதுகாக்கப்படும்! – ஜனாதிபதி கோட்டாபய உறுதி

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து காப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 21 புதிய நீதியரசர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்விலேயே அவர் இதனைத்தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது ;

“நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாகக் கூறினார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல்உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசினால் நிறைவு செய்ய முடிந்தமை பெருமை அளிக்கிறது. சட்டத்தின்தாமதங்கள் நீடித்த பிரச்னைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். என்று அவர் குறிப்பிட்டார்.

“நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது” என்ற பழமொழியை மேற்கோள்காட்டிய ஜனாதிபதி, 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உயர் நீதிமன்றப் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்னைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வலுவான, வினைத்திறனான மற்றும்சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத் துவத்தை அரசு நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது. நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பிரதம நீதியரசர் ஜயந்த சி. ஜயசூர்ய, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.