ராஜபக்‌ஷ கொத்தணியுடன் தொடர்பில் உள்ளவர்கள் முக்கிய வழக்குகளிலிருந்து விடுவிப்பு – ஐக்கிய மக்கள் சக்தி

ராஜபக்ஷ கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களை முக்கிய வழக்குகளிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை தொடர்பில் நாம் அன்று விடுத்திருந்த அபாய எச்சரிக்கை தற்போது ஜதார்த்தமாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நீதித்துறையின் மீது எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு;

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ திவிநெகும வழக்கு விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எமது நாடு நிறைவேற்றதிகாரம், நிர்வாகம், நீதிமன்றம் என்பவற்றில் பலம் பொருந்திய நாடாகும். இருப்பினும் 52 நாள் சட்டவிரோத அரசில் அலி சப்ரி போன்றோர் சட்டவிரோதமான முறையில் பிரதமரை நியமிக்க நீதிமன்றத்தை நாடினர். ராஜபக்ஷ கொத்தணியினரை முக்கிய வழக்குகளிலிருந்து விடுவிக்கும் ஒரு முக்கிய முயற்சியே இது என்று நாம் அப்போதே கூறியிருந்தோம்.

ஆகவே, நாம் அப்போதிருந்து இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்தோம். அதுவே இப்பொழுது 20 ஆவது திருத்தம் மூலம் யதார்த்தமாக்கப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நீதிமன்றத்தில் கைவைக்கும் போதும் நாம் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தோம். இப்போது சுயாதீன நீதிமன்றம் இல்லாதொழிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி தனக்கு ஏற்றவர்களை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று பிள்ளையானை எஸ்.ரி.எப். பாதுகாப்புடன் பிணையில் விடுவித்தனர். அதனைப் பார்க்கும்போது 20 ஆவது திருத்தம் எந்தளவுக்கு நீதிமன்றத்தில் தாக்கம் செலுத்துகின்றது என அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நாம் முன்னதாகவே வழங்கிய அபாய எச்சரிக்கை இப்பொழுது ஜதார்த்தமாகியுள்ளது. ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் நாம் இதனைத் தெரிவித்துக்கொள்விரும்புகின்றோம்” என்றார்.