இந்தியாவை இலங்கை முழுமையாக நம்ப முடியாது – அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்

“இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் இடைநடுவே கைவிடும் இந்தியா போன்ற நாடுகளைத் தொடர்ந்தும் நம்பி அவர்களிடம் தங்கியிருக்காது இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடனும் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.”

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உதய கம்மன்பில. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இதுவரை காலமாக இலங்கை அதன் அமைவிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத காரணத்தால் சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் எம்மைவிடப் பலமான நாடுகளாக வளர்ச்சி கண்டுள்ளன. எனினும், இனியும் நாம் அதே தவறிழைத்துவிடக்கூடாது.

எனவே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும், திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தியாவினூடாக மேற்கு – கிழக்கு நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் கனியவள தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எமது நாட்டைச் சுற்றி கனிய வளங்கள் உள்ளன. இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எம்மால் முடியாது போய்விட்டது. இதில் பல இடங்களில் நாம் தவறிழைத்துவிட்டோம். குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நாம் இது குறித்த இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் அவர்களின் நிதி பற்றாக்குறை காரணமாக இடைநடுவே விலகிக்கொண்டனர்.

எனவே, நாம் இந்தியாவை மாத்திரம் நம்பி அவர்களின் தங்கி இருக்காது, இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடன் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது” என்றார்.