கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் இன்று விடுவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச் சுறுத்தல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை இன்று திங்கட்கிழமை விடுவிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, ஆட்டுப்பட்டித் தெரு, மட்டக்குளிய ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளும் இன்று அதிகாலை 5 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

இதேவேளை, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக் குட்பட்ட லக்சந்த செவன உத்தேச வீடமைப்புத் திட்டம், சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம அலுவலர் பிரிவுகள் ஆகியன இன்று 5 மணி தொடக்கம் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளன” என்றார்.